Thursday, November 18, 2021

மாற்றம் முன்னேற்றம் - 65 தென்னை மரங்களும் பின்னே நானும்





என்னை வாழைப்பழ சோம்பேறி என்று சொல்வதை விடத் தென்னைமர சோம்பேறி என்று சொல்வது மிகச் சிறந்தது


இந்த 65 தென்னை மரங்களை வாங்கியபிறகு ஆரம்பகாலத்தில் பெரிதாக எந்த வேலைகளையும் செய்யவில்லை. காய்கள் கீழே விழ ஆரம்பித்தபிறகு பக்கத்து தோட்டக்காரர்கள் சொல்லித் தேங்காய் வெட்டுபவரை  கூட்டிவந்து தேங்காய் வெட்டுவதோடு  சரி. மழை வந்தால் தென்னந்தோப்புக்கு தண்ணீர் இல்லாவிட்டால் அதுவும் இல்லை.


நண்பன் கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரே ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மாட்டு எருவை கொட்டி அதன் பிறகு ஆரியம் அல்லது கேழ்வரகை போட்டுப் பார்த்தோம். கேழ்வரகு ஒன்றும் பெரிதாக வரவில்லை தன்னை மரங்கள் சிறிதளவு பலன் தர ஆரம்பித்தது.


பிறகு பெரியவர் வந்து கால்வாய்களை வெட்டித் தண்ணீரை ஒழுங்காகப் கொடுக்க ஆரம்பித்தபின்  சிறிதளவு நல்ல முன்னேற்றம்.ஒரு வெட்டு ஒன்றுக்கு  400-500 காய்களிலிருந்து இப்பொழுது எண்ணூறு காய்கள்வரை வெட்டுகின்றோம்


பிரிட்டோராஜ் சாரின் பதிவைப் பார்த்தபின்பு நாமும் ஏன் நம்முடைய தோட்டத்தில் அதை அமல்படுத்தி பார்க்கக் கூடாது என்று நினைத்தேன்
குறிக்கோள் இல்லாவிட்டால் பேருந்து பிடித்து எந்த ஊருக்கும் போக முடியாது என்பது எந்த அளவு உண்மையோ விவசாயத்தையும் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று தெரியாமல் ஆரம்பிப்பது அப்படியே  என்பது சொந்த அனுபவம்.


என்னுடைய எதிர்பார்ப்புகள் 

  • இந்த ஒரு வருடத்தில் வரும் தை மாதத்திலிருந்து அடுத்த தை மாதம்வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் இப்போது வெட்டும் 4000 காய்களிலிருந்து 10000 காய்கள் வெட்ட வேண்டும்.
  •  வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் கீரைகளை தோட்டத்திலிருந்து எடுக்க வேண்டும்.
  • கால்நடைகளுக்கு மற்றும் கோழிகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் மற்றும் ஏதாவது சிறு தானியங்கள் பயிரிட்டு எடுக்க வேண்டும்

செலவுகள் 

  •  தண்ணீருக்கு மின்மோட்டார் உள்ளது அதற்கான செலவுகளை இந்த ஆராய்ச்சியில் இணைக்கப் போவதில்லை.
  • இப்போது பார்த்தீனிய காடாக இருக்கும் தோப்பை ஓட்டும் செலவைச் சேர்க்க போவதில்லை
  • தேவைப்படும் ஆர்கானிக் பொருட்கள் புண்ணாக்கு போன்ற உரங்கள் உயிர் உரங்கள் மற்றும் மற்ற பூச்சி விரட்டிகளை தயாரிக்கும் செலவு ஆகியவற்றை மட்டுமே இதில் கணக்கில் சேர்க்கப் போகின்றேன்

வரவுச் செலவுக் கணக்கு

  •  தற்போது 4000 காய்கள் கிடைக்கின்றது. ஒரு காய்க்கு 10 வீதம் மொத்தம் ரூ.40,000
  •  எதிர்பார்ப்பது 10,000 காய்கள். வரவு ரூ.1,00,000 
  • இதில் காய்கறிகளையோ பசுந்தீவன செலவுகளையும் எதையும் சேர்க்கவில்லை அவை அனைத்தும் நம்முடைய மனித உழைப்புக்கான கூலியாக  எடுத்துக் கொள்கின்றேன்
  • இந்த வருடத்தில் அதிகபட்ஷமாக ரூ 40,000 செலவு செய்யப்போகின்றேன். எதிர்பார்ப்பது 1 இலட்சம். சென்ற வருடத்தைவிட ரூ.20,000 அதிகமாகப் பெற வேண்டும்

பிரிட்டோ சார் சொன்ன அனைத்தையும் ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்க முடியுமா என்று தெரியவில்லை. முதல் மாதத்தில் மூன்று விஷயங்களைச் செய்யப் போகின்றேன்.

  • மாதத்தின் முதல் நாளில் ஒவ்வொரு மரத்திற்கும் 10 மில்லி அல்லது  20கிராம் சூடோமோனஸ் தரை வழியாகத் தருவது.
  •  மாதத்தின் 11 மற்றும் 21 நாட்களில் 5 மி.லிட் மீன் அமிலம் / 10 மி.லிட் இ.எம் / 200 கிராம் அசோஸ்பைரில்லம்  / 100 கிராம் பாஸ்போபாக்டீரீயா தரைவழி பாசனத்துடன் தருவது
  •  இரண்டு மாதத்திற்கு  ஒருமுறை, ஒவ்வொரு மரத்திற்கும் மாட்டு எரு  2 கிலோவிலிருந்து 3 கிலோ வரை தருவது.

தேவைப்படுவது 

  1. சூடோமோனஸ் - 1 லிட்டர் 
  2. மீன் அமிலம்  - 350-500 மி.லிட்டர் (ஒரு முறைக்கு) - 1 லிட்டர் (இரு முறைக்கு)
  3.  இ.எம் - 500 மி.லிட்டர்
  4. 10 கிலோ அசோஸ்பைரில்லம்
  5. 6 கிலோ பாஸ்போபாக்டீரீயா
  6.  200 - 250 கிலோ மாட்டு எரு 

 

இதில் கொடுத்துள்ள அனைத்து எண்களும் ,அளவுகளும் , தொகையும் தோராய அளவுகளே. 

மழைக்கு பின் பார்க்கலாம் 

 

Best of luck to VK and KKTS Farm :-) 


No comments:

Post a Comment